புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நேற்று பொங்கல் விழா,கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.
காலை 8 மணிக்கு கவர்னர் தமிழிசை மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கட்டைக்கால் நடனம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
தொடர்ந்து நடந்த உறியடி நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பங்கேற்று உறியடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மாட்டு வண்டி ஊர்வலத்தை துவக்கிவைத்தார். தொடர்ந்து பொங்கல் விநாயகருக்கு படைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய் சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ஜான்குமார், ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், சிவசங்கர், அங்காளன், ராமலிங்கம், என்ஆர்.காங்., செயலாளர் ஜெயபால், பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், பா.ம.க.,மாநில அமைப்பாளர் கணபதி, தலைமை செயலர் ராஜிவ்வர்மா, டி.ஜி.பி. மனோஜ்குமார்லால்,புதுச்சேரி பல்கலைகழக துணைவேந்தர் குர்மீத் சிங்,அரசு துறை செயலர்கள், உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர். காங்., மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.
விழாவில் சிறுதானிய விருந்து அளிக்கப்பட்டது. இதில் கம்பு லட்டு, ராகி சேமியா, சிறுதானிய இட்லி, வடை, சாமை பணியாரம், இனிப்பு பொங்கல், சிறுதானிய தோசை, குதிரைவால் பொங்கல், சாம்பார், பல வகை சட்னிகள் வைக்கப்பட்டிருந்தது.
விழாவில் பங்கேற்ற தலைமை செயலர், டி.ஜி.பி., உள்ளிட்ட அதிகாரிகள் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தனர்.
ராஜ்நிவாசில் பொங்கல் கொண்டாட்டம் காலை 8 மணிக்கு துவங்கினாலும், முதல்வர் ரங்கசாமி காலை 10.30 மணிக்கு வந்தார். அதன்பிறகே விநாயகருக்கு பொங்கல் படைக்கப்பட்டது.