புதுச்சேரி : பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூ.500 பணம் நேற்று 3.53 லட்சம் ரேஷன்கார்டுதாரர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூ. 500 பணம் நேரடியாக ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு, கவர்னர் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து பொங்கல் பரிசாக ரூ.500 பணம் நேற்று 3.55 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது.அதில், புதுச்சேரி பிராந்தியத்தில் 2,67,005 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 500 வீதம் 13 கோடியே 35 லட்சத்து 2 ஆயிரத்து 500 செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள 61,664 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.3 கோடியே 8 லட்சத்து 32 ஆயிரமும், மாகியில் உள்ள 8,534 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.42.67 லட்சமும், ஏனாமில் உள்ள 16,046 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.80.23 லட்சம் வங்கி கணக்கில் நேற்று செலுத்தப்பட்டது.
ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் உள்ள 3,53,249 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசாக ரூ. 17 கோடியே 66 லட்சத்து 24 ஆயிரத்து 500 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ரொக்க பரிசு செலுத்தப்பட்டது பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.