புதுடில்லி, ''உலக நாடுகள் கடும் சிக்கலில் உள்ளன. இந்த நிலை எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்பதை கணிக்க முடியாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
'குளோபல் சவுத்' எனப்படும் உலகின் தென் பகுதிகளில் உள்ள நாடுகளின் அமைப்பின் இரண்டு நாள் கூட்டம் புதுடில்லியில் நடக்கிறது.
இதில், ௧௨௦ நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:
போர், மோதல்கள், பயங்கரவாதம், அரசியல்குழப்பங்கள், உணவுப் பொருள் - உரம் -பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்வு, கொரோனாவால் ஏற்பட்ட பெரும் பொருளாதார பாதிப்பு, பருவநிலை மாறுபாடு பிரச்னைகள் என, 2022ல் நாம் பல பெரும் சவால்களை சந்தித்தோம்.
தற்போது, புதிய ஆண்டு பிறந்துள்ள நிலையில், உலக நாடுகள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளன. அதே நேரத்தில் இவை பெரும் சிக்கலில் உள்ளன.
இந்நிலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதை நாம் உறுதியாக கணிக்க முடியாது.
வரும் ஆண்டுகள், தெற்கு நாடுகளின் ஆண்டாக இருக்கும். இந்த நேரத்தில், உலகம் முழுதும் உதவும் வகையில் புதிய முயற்சிகளை, நீடித்த பலன் தரக்கூடிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.
இந்த முயற்சிகள் நம் சமூகத்தை, நம் பொருளாதாரத்தை மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும்.
'ஜி - ௨௦' எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகள் அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. இந்த அமைப்பு உட்பட அனைத்து உலக அரங்கிலும் தெற்கு நாடுகளின் குரல் உரக்க ஒலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.