உடுமலை:மலைப்பாதையில்பயணம் செய்வோர், வனவிலங்குகளுக்குதொந்தரவு செய்யும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் அமைந்துள்ள, திருமூர்த்தி மலை, அமராவதி அணை மற்றும் முதலைப்பண்ணை ஆகிய பகுதிகளுக்கு, தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
தவிர, தமிழக - கேரள எல்லையான உடுமலை - மூணார் சாலை, தினமும், பகல், இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் சாலையாகவும் இருந்து வருகிறது.
இந்த மலைப்பாதை சாலையில், பலரும் வாகனங்களை வேகமாகஇயக்குவது தொடர்கதையாகி வருகிறது.
மேலும், கையில் கொண்டும் போகும் பிளாஸ்டிக் பொருட்களை வனத்தில் வீசிச்செல்வதால், வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
தவிர, வனவிலங்குகளுக்கு உணவளிப்பது, வனத்தை விட்டு வெளியே வரும் விலங்குகளுக்கு அருகில் சென்று 'செல்பி' எடுப்பது, கத்தி கூச்சலிட்டு தொந்தரவு செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து, வனத்துறையினரிடம் கேட்டபோது, 'மலைபாதையின், எஸ்பெண்ட், கொண்டை ஊசி வளைவுகள் என, சுற்றுலா பயணிகள், வாகனங்களை நிறுத்தும் இடங்களில் வனப்பணியாளர்கள் கொண்டு கண்காணிக்கப்படுகிறது. ரோந்து பணிக்காகவே பேட்டரி வாகனம் ஒன்று இயக்கப்படுகிறது. மலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை சோதனைச்சாவடியில் நிறுத்தி, அதிவேகமாக வாகனங்களை இயக்க கூடாது.
வனவிலங்குகளுக்கு உணவளிக்க கூடாது, வனவிலங்குகளுக்கு அருகில் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர். விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.