புதுடில்லி, முஸ்லிம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால், கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் வருவதைத் தொடர்ந்து, பா.ஜ., முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுாபுர் சர்மாவுக்கு, துப்பாக்கி வைத்துக் கொள்ள, 'லைசென்ஸ்' வழங்கப்பட்டுள்ளது.
பா.ஜ., செய்தித் தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, கடந்தாண்டு ஜூனில் 'டிவி' விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, முஸ்லிம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார்.
இது, நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் வன்முறை வெடித்தது.
உத்தர பிரதேசத்தின் கான்பூரில் நடந்த வன்முறையில், ௨௦ போலீசார் உட்பட ௪௦ பேர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, நுாபுர் சர்மா மீது ஹைதராபாத், புனே, புதுடில்லி, மும்பை உட்பட பல நகரங்களில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பல முஸ்லிம் நாடுகளும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இதையடுத்து, துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு, நுாபுர் சர்மா புதுடில்லி போலீசாரிடம் விண்ணப்பித்தார். இதை ஏற்று, அவருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.