உடுமலை:தென்னையில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:
வேளாண்துறை சார்பில், தென்னையில் உற்பத்தித்திறனை அதிகரிக்க, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், தென்னை மரங்களுக்கு பசுந்தாள் உர விதை, உயிர் உரங்கள் மற்றும் போராக்ஸ் ஆகியவை, விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. உடுமலை வட்டாரத்தில், தென்னை சாகுபடி பரப்பு அதிகளவு உள்ள நிலையில், தேவையான அளவு இடுபொருட்கள் இருப்பு உள்ளது.
மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை பயிர் எடுத்துக்கொள்ள, உயிர் உரங்கள் அவசியமானதாகும்.
மண்ணிலுள்ள கரிமத்தன்மையை மேம்படுத்த, பசுந்தாள் உரப்பயிர் விதைகளை, விதைத்து, அவை பூப்பதற்கு முன், மடக்கு உழவு செய்ய வேண்டும்.
தென்னையில் பிஞ்சு காய்கள் உதிர்வது முக்கிய பிரச்னையாக உள்ளது. இதனை தவிர்க்க, போராக்ஸ் இடுவது அவசியமாகும். உடுமலை வேளாண் விரிவாக்க மையம், சாளையூர், குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது.
பசுந்தாள் உர விதை ஏக்கருக்கு, 20 கிலோ, உயிர் உரம், அசோஸ்பைரில்லம், அரை லிட்டர், பாஸ்போ பாக்டீரியா, ஒரு லிட்டர் மற்றும் பசுந்தாள் சாகுபடிக்கு நிலம் தயார் செய்யவும், மடக்கு உழவு மேற்கொள்ளவும், 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, உழவன் செயலியில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு, உதவி வேளாண் இயக்குனர் தெரிவித்தார்.