சென்னை:பணி நிரந்தரம் கோரி, தலைமை செயலகத்தை முற்றுகையிட சென்ற ஒப்பந்த நர்ஸ்களை, போலீசார் கைது செய்தனர்.
கொரோனா தொற்று காலத்தில், அரசு மருத்துவமனைகளில், 6,282 நர்ஸ்கள் ஒப்பந்த பணியில் நியமிக்கப்பட்டனர்.
அதில், 3,000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. இடஒதுக்கீட்டு முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி, 810 நர்ஸ்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
முற்றுகை
மீதமிருந்த, 2,472 நர்ஸ்களுக்கு, கடந்த டிச.,31ல் ஒப்பந்தம் முடிந்ததாககூறி, பணி நீட்டிப்பு இல்லை என, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இம்மாதம் 1ம் தேதி முதல், ஒப்பந்த நர்ஸ்கள் நிரந்தர பணி கோரி, மாநிலம் முழுதும் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவது தொடர்பாக, நர்ஸ்களுடன், அமைச்சர் சுப்பிரமணியன் நடத்திய பேச்சு, தோல்வியில் முடிந்தது.
மாவட்ட சுகாதார மையம் வாயிலாக, 3,949 காலிப்பணியிடங்களில், ஒப்பந்த நர்ஸ்களுக்கு, கூடுதலாக 40 மதிப்பெண் அளிக்கப்பட்டு, பணி வழங்குவதையும் ஏற்க மறுத்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து, பணி நிரந்தரம் கோரி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த நர்ஸ்கள், சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானத்தில் நேற்று ஒன்று கூடினர்.
அங்கிருந்து, தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக கூறி, நேற்று பேரணியாக சென்றனர். நர்ஸ்கள் சிலர் கொரோனா முழு உடல் கவச உடையுடன் சென்றனர்.
அண்ணா சாலை, ஈ.வெ.ரா., சிலை அருகே போலீசார் தடுத்தி நிறுத்தி, 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பலர் கைதாகாமல் கலைந்து சென்றனர்.
பணி பாதுகாப்பு அறிவிப்பை, அரசு அறிவிக்காத வரை, போராட்டம் தொடரும் என, நர்ஸ்கள் தெரிவித்தனர்.