ஹுப்பள்ளி, கர்நாடகாவில் நேற்று பிரதமர் மோடியின் பேரணியின் போது விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, 12 வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள ஹுப்பள்ளிக்கு தேசிய இளைஞர் திருவிழாவை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று வந்திருந்தார். விமான நிலையத்தில் இருந்து, விழா நடக்கும் ரயில்வே மைதானத்துக்கு காரில் வந்தார்.
அவரை வரவேற்பதற்காக சாலையின் இரு புறமும் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
இதையடுத்து, காரின் கதவை திறந்து, படிக்கட்டில் நின்றுகொண்டே பொதுமக்களைப் பார்த்து கையசைத்தபடி பிரதமர் வந்தார்.
பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களும் அணி வகுத்து வந்தன.
அப்போது சாலையின் ஓரத்தில் நின்ற ஒரு சிறுவன், மலர் மாலையை பிரதமரிடம் கொடுப்பதற்காக ஓடி வந்தான்.
சாலை ஓரத்தில் நின்ற போலீசாரை மீறி, பிரதமரின் கார் அருகே அந்த சிறுவன் நெருங்கினான். மாலையை வாங்குவதற்காக பிரதமர் கை நீட்டினார்.
அதற்குள், பிரதமரின் அருகில் வந்த சிறப்பு பாதுகாப்பு படை வீரர், அந்த மாலையை சிறுவனிடம் இருந்து பறித்ததுடன், அவனை கூட்டத்துக்குள் தள்ளி விட்டார். பின், அந்த மாலையை பிரதமரிடம் அந்த வீரர் கொடுத்தார்.
இதற்குள் கர்நாடக போலீசார், அந்த சிறுவனை சுற்றி வளைத்தனர். இந்த சம்பவத்தால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஹுப்பள்ளி போலீஸ் கமிஷனர் ராமன் குப்தா கூறியதாவது:
பிரதமரை வரவேற்பதற்காக சாலை ஓரத்தில் நின்றிருந்த சிறுவன் உட்பட அனைவரையுமே ஏற்கனவே முழுமையாக சோதனையிட்ட பிறகே அனுமதித்தோம்.
அந்த சிறுவன் வைத்திருந்த மலர் மாலையையும் ஏற்கனவே சோதித்து விட்டோம்.
எனவே, இதை பாதுகாப்பு விதிமீறலாக கருத முடியாது. பிரதமரின் பாதுகாப்புக்காக, 3,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தாலும், அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.