சட்டசபையில் ராமர் தொடர்பாக, மா.கம்யூ., - எம்.எல்.ஏ., பேசியதற்கு, பா.ஜ., - அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டசபையில், சேது சமுத்திர திட்ட தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
மா.கம்யூ., - நாகை மாலி: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றும்படி, மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். ஆனால், 'ராமர் பாலம்' எனக் கூறி, ராமர் பெயரை சொல்லி, மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது.
கட்டுக் கதைகளையும், கற்பனைகளையும், நம்பிக்கைகளையும், சிலர் வரலாறு என்கின்றனர். இவை வரலாறு ஆகாது. ராமாயணம் சிறந்த இலக்கிய படைப்பு. ஆனால், இது ஒரு கற்பனைக் காவியம். இதை, காந்தியடிகள் சொல்லி உள்ளார்.
கற்பனையையும், நம்பிக்கைகளையும், சிலர் உண்மை வரலாறு எனக் கூறி, நாட்டில் பெரும் குழப்பத்தை விளைவிக்கின்றனர். வழக்கை விரைவாக முடித்து, இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: முதல்வர் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தால், அதை ஆதரிக்க வேண்டுமா, எதிர்க்க வேண்டுமா? என்பதை மட்டும் கூற வேண்டும்.
அதைவிடுத்து, ராமாயணம் ஒரு கற்பனைக் கதை; மூட நம்பிக்கை என்றெல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. மூட நம்பிக்கை எனக் கூறியதை கண்டிக்கிறேன். அதை, அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
தெய்வ நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனின் உணர்வுகள். இதை, மூடநம்பிக்கை என்று பேசுவதை அனுமதிக்கக் கூடாது.
முதல்வர் ஸ்டாலின்: யாரும் தெய்வம் குறித்தோ, மதம் குறித்தோ குறை கூறி பேசவில்லை. அதை பயன்படுத்தி கெடுத்து விட்டனர் என்று தான் கூறினார். அப்படி பேசி இருந்தால், நீங்கள் கூறியதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
நயினார் நாகேந்திரன்: சேது சமுத்திரம் திட்டம் வந்தால், எங்களை விட மகிழ்ச்சி அடைவோர் வேறு யாரும் இருக்க முடியாது. வாஜ்பாய் காலத்தில் சாத்தியக்கூறு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்பின், பணி துவக்கப்பட்டது. அப்பகுதி ஆழமில்லா பகுதி. மண் எடுக்க எடுக்க, கடல் நீரோட்டத்தால் மண் சரிந்து கொண்டே இருக்கும். இதன் காரணமாக திட்டம் நிறுத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதிப்பு, சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதையும் நினைவில் வைத்து, திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
அ.தி.மு.க., - ஜெயராமன்: முதல்வரின் தீர்மானத்தை ஏற்கிறோம் அல்லது எதிர்க்கிறோம் எனக் கூறி இருந்தால், பெரிய விவாதம் நடந்திருக்காது. ராமர் என்ற கதாபாத்திரம் கற்பனையானது எனக் கூறியது, அவையில் பதிவாகி இருப்பது, எங்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது.
நுாறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் பின்பற்றும் மதத்தின் நாயகன் ராமர்; அவதாரப் புருஷர். ராமர் ஒரு கதாபாத்திரம் என்பதை, அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
சபாநாயகர்: இரண்டும் அவை குறிப்பில் இருக்கும்.
ஜெயராமன்: சேது சமுத்திர திட்டம், 2,427 கோடி ரூபாய் செலவில் ஏற்கனவே துவக்கப்பட்டது. எவ்வளவு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு, மண் அள்ளப்பட்டது என்பது கடலுக்கு கீழ் உள்ள விஷயம். இதுகுறித்து, ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.