உடுமலை:உடுமலை, ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரியில், உடுமலை பகுதிகளிலுள்ள பள்ளி மாணவர்களுக்கான, கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது.
கல்லுாரி செயலர் சுமதி தலைமை வகித்தார். கலைச்சாரல் - 2023 விழாவில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, 20க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
சுவரொட்டி தயாரித்தல், இணைப்பு விளையாட்டு, ரங்கோலி, ஓவியம், தனிநபர் நடனம், குழு நடனம், வினாடி வினா, பாட்டு, மெஹந்தி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட கலைப்போட்டிகள் நடந்தன. மேலும், பந்து எறிதல், மேசைப்பந்து, இறகுப்பந்து போன்ற விளையாட்டுப்போட்டிகளும் நடந்தன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அதிக அளவில் பங்கேற்று, அதிக பரிசுகளை பெற்ற, ஸ்ரீ விசாலாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்புக்கோப்பை பெற்றனர். இயக்குனர் மஞ்சுளா, முதல்வர் ராஜேஸ்வரி, மாணவியர் சேர்க்கை குழுவின் ஒருங்கிணைப்பாளருமான அறம், தமிழ்த்துறை சுயநிதி பிரிவு தலைவர் பிருந்தா, ஆங்கில துறை ரேணுகா, வணிக மேலாண்மை துறைத்தலைவர் உமா மகேஸ்வரி, கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் மணிமேகலை மற்றும் பேராசிரியைகள், கல்லுாரி மாணவியர் பங்கேற்றனர்.