டேராடூன் நிலச்சரிவு அச்சுறுத்தல் உள்ள பகுதியாக உத்தரகண்டின் ஜோஷிமத் அறிவிக்கப்பட்ட பின், அம்மாநிலத்தில் உள்ள புனித தலமான கர்ணபிரயாக் உட்பட மேலும் சில பகுதிகள் பல ஆண்டுகளாக நிலச்சரிவு அபாயத்துடன் இருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்களையும் அரசு வெளியேற்றி வருகிறது.
மலைகளால் சூழப்பட்ட மாநிலமான உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஜோஷிமத் என்ற இடத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களில், கடந்த சில வாரங்களாக விரிசல்கள் ஏற்பட்டன. இரண்டு ஹோட்டல் கட்டடங்கள் சரிந்த நிலையில் உள்ளன.
இதை தொடர்ந்து நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியாக ஜோஷிமத் அறிவிக்கப்பட்டது. இடிந்துவிழும் நிலையில் உள்ள வீடுகளில், 'எக்ஸ்' அடையாளக்குறி இடப்பட்டது. அங்கு வசித்து வந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை தரைமட்டமாக்கவும், மக்களை அப்புறப்படுத்தும் பணியிலும் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இச்சம்பவம், மாநிலம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஜோஷிமத்தில் இருந்து 80 கி.மீ., தொலைவில் உள்ள புனிதத்தலமான கர்ணபிரயாக்கின் பகுகுணா நகர் என்ற இடத்தில், 50க்கும் மேற்பட்ட வீடுகளில், கடந்த 2015 முதல் விரிசல்கள் ஏற்பட்டு வருவது தற்போது கவனம் பெற்றுள்ளது.
இந்நிலை, சமோலி மாவட்டத்தில் உள்ள கோபேஸ்வர் மற்றும் கேதார்நாத் நெடுஞ்சாலையில் குப்த்காசி அருகே உள்ள கிராமங்களிலும் தொடர்கிறது.
மேலும், முசோரியில் உள்ள லாண்டோர் மற்றும் ரிஷிகேஷ் அருகே உள்ள அடாலி என்ற கிராமமும், நிலச்சரிவு அபாயத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு சாலையில் மிகப் பெரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து, சமோலி மாவட்ட கலெக்டர் ஹிமான்ஷு குரானா கூறியதாவது:
கர்ணபிரயாகில் ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள கட்டடங்களை சீர் செய்ய, ரூர்கியில் உள்ள ஐ.ஐ.டி., நிபுணர்களின் உதவியை நாடியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
'தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வது, விதிமுறைகளை மீறி கட்டடங்களை கட்டுவது, அலக்நந்தா மற்றும் பிண்டார் நதிகளால் ஏற்படும் நில அரிப்பு, மழை வெள்ளத்தை முறையாக வெளியேற்றாதது ஆகியவை இந்த நிலச்சரிவு அபாய நிலைமைக்கு காரணம்' என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஜோஷிமத் பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக 1.50 லட்சம் ரூபாய் வழங்க, சமோலி மாவட்ட கலெக்டர் ஹிமான்ஷு குரானா தலைமையில், 19 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:ஜோஷிமத் பகுதியில் 25 - 30 சதவீத வீடுகள் மட்டுமே நிலச்சரிவு அபாயத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பகுதியே மூழ்கிக் கொண்டிருப்பதை போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது. உண்மை அதுவல்ல. இது, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். அவர்கள், சுற்றுலா பயணியரையும், ஆன்மிக பயணம் வரும் பக்தர்களையுமே நம்பி உள்ளனர்.இந்த 1.50 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணம் தான். முழுமையான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் நலனை மனதில் வைத்தே, அவர்களுக்கான இழப்பீடு தொகையை அரசு நிர்ணயிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ஜோஷிமத் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உள்துறை செயலர் அஜய் பல்லா உட்பட பல்வேறு துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். 40 நிமிடங்கள் நடந்த கூட்டத்தில், ஜோஷிமத் நகரின் தற்போதைய நிலை மற்றும் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், உத்தரகண்ட் மாநில மூத்த அதிகாரிகள், ஐ.ஐ.டி., - ரூர்கியை சேர்ந்த நிபுணர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை கல்வி நிறுவனம் மற்றும் இந்திய புவியியல் ஆய்வு நிறுவன அதிகாரிகள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர்.