சபரிமலை,திருவாபரணம் நேற்று மதியம் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டது. நாளை மகரஜோதி விழா நடக்கிறது. இதையொட்டி போலீசார், பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
கேரள மாநிலம் சபரிமலையில் நாளை நடக்கும் மகரஜோதி விழாவில், அய்யப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்கான திருவாபரணங்கள், பக்தர்களின் சரணகோஷத்திற்கு இடையே நேற்று பவனி புறப்பட்டது.
இவை, நாளை மாலை 6:30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும். ஆபரணங்கள் அய்யப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்த சில வினாடிகளில், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி மூன்று முறை தெரியும்.
ஜோதி தரிசனத்துக்காக நேற்று முன்தினம் முதல், பக்தர்கள் பல்வேறு இடங்களில் குடில்கள் கட்டி தங்கியுள்ளனர். இன்றும், நாளையும் அதிகமானோர் வருவர் என எதிர்பார்க்கப்படுவதால், போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதன்படி நாளை பகல் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல முடியும்.
இதன் பின் வருவோர், ஜன., 15 அதிகாலையில் தான் மலையேற முடியும். ஜோதி தரிசனத்துக்கு பாண்டிதாவளத்தில் 26 ஆயிரம் பேரும், கோவில் சுற்றுப்புறங்களில் 3,000 பேரும் நிற்க முடியும் என போலீசார் கணக்கிட்டுள்ளனர்.
கூட்டம் அதிகமாகும் இடங்களில் நெரிசல் ஏற்படாமல் தடுக்க, மெகா போன் மூலம் போலீசார் அறிவுரைகள் வழங்குவர். பக்தர்கள் தங்கும் இடங்களில் சமைக்கக் கூடாது; பக்தர்கள் தாண்டாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படும்.