ஈரோடு:'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிடலாம்' என, அக்கட்சியினர் மத்தியில் பரவலாக தகவல் பரவி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்., - எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, 46, கடந்த வாரம் இறந்தார்.
விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில், திருமகன் தந்தை இளங்கோவன் அல்லது திருமகன் தம்பி சஞ்சய் அங்கு நிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
ஆனால், கடந்த லோக்சபா தேர்தலில், தேனி தொகுதியில் இளங்கோவன் தோற்றார். ஈரோடு தொகுதியில் மகன் போட்டியிட்டதால், ஏராளமான செலவை இளங்கோவன் சந்தித்தார். சில சொத்துக்களை விற்றதுடன், கடனுக்கும் தள்ளப்பட்டார்.
எனவே, மீண்டும் அவர் அல்லது அவரது குடும்பத்தார் நிறுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம், திருமகன் மனைவி பூர்ணிமா போட்டியிடுவாரா என, அவரின் குடும்பத்தினரிடம், தி.மு.க., மேலிடம் கேட்டுள்ளது.
இதற்கிடையே, காங்., தரப்பில் மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் ரவி, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள்ராஜனும், அந்த 'சீட்'டை பெற முயற்சிக்கின்றனர்.
மறுபுறம் இத்தேர்தல் வெற்றி, தி.மு.க.,வுக்கு சவாலானது என்பதால், காங்., கட்சியை சமாதானம் பேசி, தி.மு.க.,வே நிற்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. காங்., வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தேர்தல் பணி செய்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தி.மு.க., வேட்பாளர் போட்டியிட்டால், எம்.எல்.ஏ.,க்கள் - அமைச்சர் என அனைவரும் களமிறக்கப்படுவர்.
அதற்கேற்ப எம்.எல்.ஏ., வாய்ப்புக்கு பதில், ராஜ்யசபா எம்.பி., உள்ளிட்ட பிற வாய்ப்புகள் வழங்கலாமா என தி.மு.க., தலைமை யோசிக்கிறது.
தி.மு.க., ஒருவேளை போட்டியிட்டால், மாவட்ட துணை செயலர் செந்தில்குமாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
அதே நேரம் இளைஞரணி பிரகாஷ், எல்லப்பாளையம் சிவகுமார் உட்பட பலரும் அதுபோன்ற முயற்சியில் உள்ளதாக, கட்சியினரிடையே தகவல் பரவி வருகிறது.