தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லாத, 170 சட்டங்களை ரத்து செய்வதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் சட்டங்களான, 1930 தமிழக உள்ளாட்சி மன்றங்கள் திருத்த சட்டம்; 1954 தமிழக தனியார் காடுகளை பாதுகாத்தல் திருத்த சட்டங்கள்; 1985 தமிழக கேளிக்கைகள் வரி திருத்த சட்டங்கள்; 2004 தமிழக விலங்குகள் மற்றும் பறவைகள் பலியிடுவதை தடை செய்தல் நீக்க சட்டம் உட்பட, 199 சட்டங்களை ரத்து செய்ய, தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது.
அதன்படி பழமையான மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற, 169 சட்டங்களை ரத்து செய்வதற்கான, சட்ட முன்வடிவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், 1984 தமிழக கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
திருச்சி, கடலுார், தேனி சந்தை குழுக்களின் தனி அலுவலர்கள் பதவி காலத்தை, நவ., 29 முதல் ஓராண்டுக்கு நீட்டித்து, கடந்த டிச., 15 அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்கான சட்ட முன்வடிவை, நேற்று வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சட்டசபையில் தாக்கல் செய்தார்.