உடுமலை:உடுமலை அருகேயுள்ள, வாளவாடியில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், செல்வி காஸ் ஏஜென்சி சார்பில், சமையல் காஸ் பாதுகாப்பு மற்றும் செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின், கோவை மண்டல துணை மேலாளர் அபிஜித் விஜய் பேசுகையில், ''சமையல் காஸ் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையில், பொதுமக்கள் உரிய பாதுகாப்புடன் முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். சிறு தவறுகள் பெரும் விபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒரு முறை, ரப்பர் குழாயை மாற்றி விட வேண்டும். காஸ் சம்பந்தமான உபகரணங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்,'' என்றார்.
இதில், செல்வி காஸ் உரிமையாளர் அய்யப்பன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், துணைத்திட்ட அலுவலர்கள் மற்றும் கல்லுாரியின் பாரத் அபியான் திட்ட பொறுப்பாளர் மெஹர்பானு மற்றும் கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.