சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - விஜயபாஸ்கர்: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இருந்து, துவரங்குறிச்சி வரை நகர பஸ் இயக்க வேண்டும். புறநகர பஸ்கள் உள்ளே வராததால், கூடுதல் நகர பஸ்களை இயக்க வேண்டும்.
அமைச்சர் சிவசங்கர்: விராலிமலை - துவரங்குறிச்சி வழித்தடம், 32 கி.மீ., துாரமுடையது. இந்த வழித்தடம் முழுதும், திருச்சியில் இருந்து மதுரை வரை, 5 முதல் 10 நிமிட இடைவெளியில் புறநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, இவ்வழித்தடத்தில், மூன்று நகர பஸ்கள் தினசரி ஆறு நடைகள் இயக்கப்படுகின்றன.
நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிப்பதால், நகர பஸ் அவசியம் என, கோரிக்கை விடுத்திருக்கலாம். முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பின், 222.51 கோடி பெண்கள், இலவசமாக பயணித்துள்ளனர். தினமும், 40 லட்சம் பெண்கள் இலவசமாக பஸ் பயணம் செய்கின்றனர்.
விஜயபாஸ்கர்: பல இடங்களில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.
அமைச்சர் சிவசங்கர்: கடந்த ஆட்சியில் புதிதாக டிரைவர், கண்டக்டர்கள் பணி அமர்த்தப்படவில்லை. போதுமான டிரைவர், கண்டக்டர் இல்லாததால் பஸ்கள் நிறுத்தப்பட்டன. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏதேனும் பஸ் இயக்கப்படாமல் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.