''மது பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். 'டாஸ்மாக்' மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பேசினார்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில், அவர் பேசியதாவது:
கொரோனா பாதிப்பை குறைக்க, நாடு முழுதும் உள்ள மக்களுக்கு, 220 கோடி 'டோஸ்' தடுப்பூசி வழங்கிய பிரதமர் மோடிக்கு, கவர்னர் உரையில் நன்றி தெரிவித்து இருக்கலாம்.
மது, போதை பயன்பாடு அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். மது மட்டுமின்றி பலவகை போதைப் பொருட்கள் பயன்பாடு உள்ளது.
அதேநேரம், டாஸ்மாக்கை மூடிவிட்டு, அரசை நடத்த முடியாது. ஏற்கனவே, மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. முடியாதபட்சத்தில் மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை பகல், 12:00 மணி முதல் மதியம், 5:00 மணி வரை இயங்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு, நயினார் நாகேந்திரன் பேசினார்.
இவரை தொடர்ந்து பேசிய காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, ''டாஸ்மாக் கடைகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சுடுகாட்டிற்கு அருகே மதுக்கடைகளை மாற்ற வேண்டும்,'' என்றார்.