இஸ்லாமாபாத் பிரிட்டனின் லண்டனில் பிடிபட்ட பழைய இரும்பு பொருட்களுடன், 'யுரேனியம்' மறைத்து அனுப்பப்பட்ட 'பார்சல்' கராச்சியில் இருந்து அனுப்பப்படவில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு கடந்த டிச., ௨௯ல் பயணியர் விமானம் இயக்கப்பட்டது.
இந்த விமானத்தில் இருந்த பார்சல்கள், லண்டன் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டன. அப்போது ஒரு பார்சலில் பழைய இரும்புப் பொருட்களுக்கு இடையே, யுரேனியம் என்ற கதிர்வீச்சு அதிகம் உள்ள வேதிப்பொருள் இருந்தது. இது, அணுமின் சக்தி உற்பத்திக்கும்; அணு ஆயுதம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இதையடுத்து, லண்டன் விமான நிலைய அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். லண்டன் போலீசின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு உள்ளிட்ட போலீசார், அவற்றை பரிசோதித்தனர்.
இந்த பார்சல் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து, லண்டனில் உள்ள மேற்காசிய நாடான ஈரானைச் சேர்ந்த ஒருவருக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக பிரிட்டன் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா நேற்று கூறியுள்ளதாவது:
இந்த பார்சல், கராச்சியில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டன் அரசிடமிருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.