பொள்ளாச்சி:இஞ்சி பயிரிட விரும்பும் விவசாயிகள், மானியம் பெற பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டார, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தோட்டக்கலை பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க, தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதில், தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு வட்டாரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், இஞ்சி பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு, மானியம் வழங்கப்பட உள்ளது.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆனைமலை வட்டாரத்தில், ஏழு ஏக்கர் பரப்பளவுக்கு, இஞ்சி விவசாயம் நடக்கிறது. தவிர, மற்ற வட்டாரங்களில், இஞ்சி விவசாயம் நடைபெறவில்லை.
இதையடுத்து, இஞ்சி சாகுபடி பரப்பை அதிகரிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆனைமலை வட்டாரத்துக்கு ஏழு ஏக்கர், பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு வட்டாரங்களுக்கு, தலா, ஐந்து ஏக்கர் வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திட்டப்படி, ஒரு ஏக்கருக்கு, 4,800 ரூபாய் வரை, மானியம் வழங்கப்படும். தென்னை விவசாயிகள், ஊடுபயிராகவும் இஞ்சியை பயிரிடலாம்.
விருப்பமுள்ள விவசாயிகள், சிட்டா, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல்களுடன், தங்கள் பகுதிக்கு உட்பட்ட, தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில், பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்து, இஞ்சி விதைப்பை முடித்த பின், அதற்கான செலவினங்கள் அடங்கிய ரசீதுடன், வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை அணுகினால், மானியம் பெற்று தரப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.