மெல்பர்ன் ஆஸ்திரேலியாவில், காலிஸ்தான் ஆதரவாளர்களால் ஹிந்து கோவில் நேற்று முன்தினம் சூறையாடப்பட்டது. இதன் சுவரில் பிரதமர் மோடிக்கு எதிராகவும், தீவிரவாதி பிந்த்ரன்வாலேவுக்கு ஆதரவாகவும் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள மில் பார்க் என்ற இடத்தில், சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. இங்கு, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு திரண்டு கோவிலை சூறையாடினர்.
பின், காலிஸ்தான் தீவிரவாதி பிந்த்ரன்வாலேவுக்கு ஆதரவான வாசகங்களை கோவில் சுவரில் எழுதினர். பிரதமர் மோடியை, ஹிட்லர் என விமர்சித்தும் சுவரில் எழுதிச் சென்றனர். இந்த செயலுக்கு, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஹிந்துக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் ஹிந்து கவுன்சில் தலைவர் மக்ரந்த் பாகவத் கூறியதாவது:
வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது, விக்டோரியா மாகாணத்தின் இன மற்றும் மத சகிப்புத்தன்மையை மீறும் செயல்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, விக்டோரியா போலீஸ் மற்றும் முதல்வர் டான் ஆண்ட்ரூஸ் ஆகியோரை கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில் சூறையாடப்பட்ட சம்பவத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் படம் பிடித்து, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.