உடுமலை:வெறிநோயை தடுக்க, நாய்களுக்கு ஆண்டுதோறும் வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதை சமுதாய கடமையாக மக்கள் செய்ய வேண்டும் என, கால்நடைத்துறை சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழக கால்நடை பராமரிப்புத்துறையின், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், ராஷ்டிரிய கிருஷி விகாஷ் யோஜனாவின் கீழ், வெறிநோயை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு தடுப்பூசி முகாம், மடத்துக்குளத்தில் நடந்தது.
முகாமில், மடத்துக்குளம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஈஸ்வரசாமி, பேரூராட்சித்தலைவர் கலைவாணி, கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஜெயராம், திருப்பூர் கால்நடை புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கவுசல்யா முன்னிலை வகித்தனர்.
மடத்துக்குளம் கால்நடை உதவி மருத்துவர் கிருத்திகா தலைமையிலான குழுவினர், 92 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். கால்நடை மருத்துவ கல்லுாரி உதவி பேராசிரியர் விக்னேஷ் பேசினார்.
தொடர்ந்து, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களிடையே வெறிநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கால்நடைத்துறையினர் பேசியதாவது:
மனித சமுதாயம் எதிர்கொள்ளும் பயங்கர நோய்களில், வெறிநோயும் ஒன்றாகும். ஓராண்டுக்கு, சராசரியாக, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கின்றனர்.
வெறி நோய் பொதுவாக, நாய் குடும்பத்தைச்சேர்ந்த விலங்குகள் வாயிலாக பரவுகிறது. மூர்க்கத்தனமான வெறிநாய்கள், ஆக்ரோஷமாக திரியும்; எதிர்கொள்ளும் அனைத்தையும் கடிக்கும்; எச்சில் வடிந்து கொண்டே இருக்கும். உணவு மற்றும் தண்ணீரை விழுங்க சிரமப்படும். ஊமைத்தனமான வெறிநாயானது, அமைதியாக பசியின்றி காணப்படும். இருளான மறைவிடங்களில் ஒளிந்து கொள்ளும். கண்களை ஒளியை நோக்கி திருப்பினால், தலையை திருப்பி கொள்ளும். தாடை தொங்கி காணப்படும். உடலின் முன், பின் கால்களில் தளர்ச்சியும் இருக்கும். வெறிநாய் கடித்தவுடன், கடிபட்ட இடத்தை முதலில், நன்றாக தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.
கிருமிநாசினி அல்லது கார்பாலிக் அமிலம் கொண்ட சோப்புகளை கொண்டோ கடிபட்ட இடத்தை சுத்தம் செய்யலாம். உடனடியாக அருகிலுள்ள டாக்டரை அணுக வேண்டும். நாய் கடித்தவுடன், கடிபட்ட இடத்தில் கட்டு கட்டுதல் கூடாது.
செல்லப்பிராணிகளுக்கு, 3 மாத வயதில், முதல் தடுப்பூசியும், 21 நாள் கழித்து பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்த வேண்டும். பின்னர் ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
வெறிநோய் தடுப்பின் துவக்கம், நாய் வளர்ப்போரின் பொறுப்புணர்வில்தான் ஆரம்பிக்கிறது.
அனைத்து நாய்களுக்கும் ஆண்டுதோறும் வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும். கால்நடை டாக்டர் அறிவுரையின்படி, இதை ஒரு சமுதாய கடமையாக மக்கள் செய்ய வேண்டும். செல்லபிராணிகளை, சுதந்திரமாக தெருக்களில் திரிய விடக்கூடாது.
இவ்வாறு, பேசினர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.