சென்னை:கவர்னர் மாளிகையில், தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருந்த, செய்தி மக்கள் தொடர்பு இணை இயக்குனர் செல்வராஜ், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்டார்.
தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே, மோதல் அதிகரித்து வரும் நிலையில், நேற்று கவர்னர் மாளிகையில், பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பங்கேற்க, முக்கியப் பிரமுகர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என, பல்வேறு தரப்பினருக்கும், அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தது.
அழைப்பிதழில், இந்திய அரசின் சின்னம் இடம் பெற்றிருந்தது; தமிழக அரசு சின்னம் இடம் பெறவில்லை. மேலும், 'தமிழ்நாடு' எனக் குறிப்பிடாமல், 'தமிழகம்' எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அழைப்பிதழில் தமிழக அரசு சின்னம் இடம் பெறாதது குறித்த விபரம், கவர்னருக்கு முறையாக, அதை தயார் செய்த அலுவலர்களால் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், கவர்னர் மாளிகை மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த, இணை இயக்குனர் செல்வராஜ், திடீரென அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். அவர், கடந்த இரு தினங்களாக விடுப்பில் உள்ளார்.
அழைப்பிதழ் அச்சடிப்பு குளறுபடி காரணமாக, அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று நடந்த விழாவில், விழா மேடையில், தமிழக அரசு சின்னம் இடம் பெற்றிருந்தது. 'தமிழ்நாடு' என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.