சென்னை:''பொங்கல் விழா பல ஆயிரம் ஆண்டுகள் கலாசாரம் கொண்டது. இந்த விழாவால், ராஜ்பவன், 'மினி' தமிழகமாக மாறி உள்ளது,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார். பொங்கல் விழாவால் கவர்னர் மாளிகை, நேற்று களை கட்டியது.
தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா, சென்னை ராஜ்பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. கவர்னர் ரவி தலைமை வகித்தார். ராஜ்பவன் மாளிகை ஊழியர்களின் குடும்பத்தினர் பொங்கல் வைத்ததை, கவர்னர் ரவி பார்வையிட்டார்.
விழாவில், தமிழகம் முழுதும் இருந்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் முதல் விவசாயிகள், மாணவர்கள் வரை, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொருவரிடம் சென்று, கவர்னர் ரவி, பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
விழாவில் கவர்னர் ரவி பேசுகையில், ''அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்,'' என, தமிழில் வாழ்த்து கூறினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
பொங்கல் விழா பல ஆயிரம் ஆண்டுகள் கலாசாரம் கொண்டது. பொங்கல் திருநாள் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியும் கலாசாரம் நிகழ்வாக நடத்தப்படுகிறது.
இங்கு, 'மினி தமிழகம்' எனக் கூறும் வகையில், பொங்கல் பண்டிகை கொண்டாடி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கிராமிய கலைஞர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இவ்விழாவில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, விஜயபாஸ்கர், தங்கமணி, ராஜு, அன்பழகன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோர் பங்கேற்றனர். ஆற்காடு நவாப், முன்னாள் கவர்னர்கள் நாராயணன், ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிராமிய கலைஞர்கள், வேளாண் பல்கலை மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா நிறைவில், அனைவருக்கும், தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.