சென்னை:சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சுக்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டசபையில் , சேது சமுத்திர திட்டம் தொடர்பான தீர்மானத்தில் மீது, விவாதம் நடந்தது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சபையில் இல்லை.
சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:
இது ஒரு அற்புதமான, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தும் திட்டம். இந்த திட்டத்தை ஆதரிப்போம் என்றவர்கள், தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கின்றனர். இந்த திட்டத்தை கொண்டு வர காங்கிரஸ் அரசு தயங்குகிறது எனப் பேசி உள்ளனர்.
இலங்கை திரிகோணமலையில் ராணுவ தளம் அமைக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. இதற்கு, இந்திரா, ராஜிவ் ஆட்சி துணையாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை அமைதிப்படுத்திய சபாநாயகர் அப்பாவு, ''அவர் கூறியதில் என்ன தவறு என்று கூறுங்கள்,'' என்றார். அதைத் தொடர்ந்து நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - செங்கோட்டையன்: ஒரு தீர்மானத்தின் மீது, சட்டசபை காங்., தலைவர் தன் கருத்தை கூறுவது சரியாக இருக்கும். எங்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசக்கூடாது.
சபாநாயகர்: காங்., முட்டுக்கட்டையாக இருந்தது எனக் கூறியது குறித்து பேசுகிறார். இதில், என்ன குற்றம் உள்ளது.
பன்னீர்செல்வம்: அரசினர் தீர்மானத்தின் பொருள்; அதில் உள்ள சாதக, பாதகம் குறித்து பேச வேண்டும். கடந்த காலங்களில் பல்வேறு நிகழ்வுகளில், பல்வேறு கருத்துக்களை அரசியல் கட்சிகள் கூறி இருக்கலாம்.
அதை இப்போது பேச நேரம் இல்லை. அதற்கு இந்த சபையை பயன்படுத்தக்கூடாது. அவர்கள் பேசினால், எல்லாரும் பேசக்கூடிய வாய்ப்பை உருவாக்குவதாகி விடும்; அது தேவையற்றது.
முதல்வர் ஸ்டாலின்: இது ஒட்டுமொத்தமாக, ஏகமனதாக நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம். இதில் சச்சரவு வரக்கூடாது. சட்டசபை காங்., தலைவர், சபை குறிப்பில் இருப்பதைத் தான் கூறினார்.
அதுகூட இடம் பெறக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் கூறுகின்றனர். பன்னீர்செல்வம் கூறியதை ஏற்கிறேன். அதை உணர்ந்து, தீர்மானத்தை நிறைவேற்றி தர வேண்டும்.
பன்னீர்செல்வம்: ஜெயலலிதா தன் நிலையை மாற்றிக் கொண்டதாக தெரிவித்தார். அந்த திட்டம் நிறைவேற்றப்படும்போது, நம்முடைய கடல் பகுதி மணல் நகரும் தன்மை கொண்டதாக உள்ளது என்பது உட்பட, சுற்றுச்சூழல் நிபுணர்கள் சில கருத்துக்களை தெரிவித்தனர்.
எனவே, திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து, வெட்டப்படும் கால்வாய் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
கால்வாய் மூடப்பட்டால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வீணாகும் என்பதை, ஜெயலலிதா எடுத்துரைத்தார். இந்த திட்டம் தமிழக மக்களுக்கு பயனுள்ள திட்டம். ஆனால், அதில் இருக்கின்ற பாதகங்களை ஆராய்ந்து, அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.
செல்வப்பெருந்தகை: சபைக் குறிப்பில் உள்ளதைத்தான் பேசினேன். காங்., தடுப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால், காங்., அரசு தான் நிதி ஒதுக்கியது.
இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது யார் என்பதைத்தான் கூற வந்தேன். தேர்தல் கூட்டத்தில், ஜெயலலிதா என்ன பேசினார் என்பதற்குள் செல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறியதும், பன்னீர்செல்வம் உட்பட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சபாநாயகர் அமைதிப்படுத்தி அமர வைத்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய பன்னீர்செல்வம், ''சமீபத்தில் புயல் வந்தது. கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதியில், அலை வீசி, குடியிருப்பு பகுதிகளில் இடுப்பு வரை களிமண் குவிந்தது.
''எனவே, இதை எல்லாம் ஆராய்ந்து பாதகங்களை நிவர்த்தி செய்து, திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்றுதான் கூறுகிறோம்,'' என்றார். அத்துடன் விவாதம் நிறைவடைந்தது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கிண்டல் அடித்ததால், சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கடும் அதிருப்தி அடைந்தார். சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, நேற்று விவாதம் நடந்தது. சட்டசபை கட்சிகளின் தலைவர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. காங்., சார்பில் அக்கட்சி சட்டசபை தலைவர் செல்வப்பெருந்தகை பேச எழுந்தார்.
'கடந்த காலங்களில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. இப்போது, அதிகம் பறிமுதல் செய்வதாக செய்திகள் வருகிறது' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'ஜால்ரா' என, அவரை கிண்டல் அடித்தனர். அவரை பேசவிடாமல் கோஷம் எழுப்பினர். இதனால், செல்வப்பெருந்தகை அதிருப்தி அடைந்தார். 'இதுபோன்ற செயல்களை எப்படி அனுமதிக்கிறீர்கள்?' என, சபாநாயகரை பார்த்து பேசியபடி இருந்தார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ''சட்டசபை கட்சித் தலைவர்கள் பேசும்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அமைதியாக இருந்தனர். சட்டசபை காங்., தலைவர் பேசும்போது, வேண்டுமென்றே திட்டமிட்டு, அ.தி.மு.க.,வை தாக்கி பேசுகிறார். அத்தகைய சூழல் வரும்போது, இங்கே குரல் வருகிறது. இதை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது,'' என்றார். இதையடுத்து, பொது விஷயங்கள் குறித்து பேசுவதை தவிர்த்து, தொகுதி பிரச்னைகள் தொடர்பாக செல்வப்பெருந்தகை பேசினார். இதனால் சபையில், 10 நிமிடங்களுக்கு மேல் பரபரப்பு நிலவியது.