சென்னை:சட்டசபையில் நடந்த விவாதம்:
மா.கம்யூ.,- - சின்னதுரை: கோவை ஈஷா மையத்திற்கு சிறப்புப் பயிற்சிக்கு சென்ற சுபஸ்ரீ என்பவர், அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்: சுபஸ்ரீ காணாமல் போனது குறித்து, ஆலந்துரை போலீஸ் நிலையத்தில், 2022 டிச., 19ல் புகார் பெறப்பட்டு, வழக்கு பதிவாகி உள்ளது. போலீசார் முறையாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
துலுக்கன்காடு தோட்டம் அருகில் உள்ள கிணற்றில், சுபஸ்ரீ இறந்துகிடந்தது தெரியவந்துள்ளது. அவரது உடல் மீட்கப்பட்டு, கோவை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மூன்று டாக்டர்கள் அடங்கிய குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கணவர் பழனிகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில் பதிவாகியுள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகள், சுபஸ்ரீ மற்றும் அவரது கணவரின் 'மொபைல் போன்'கள் கைப்பற்றப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நிச்சயமாக உண்மை கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.