பொள்ளாச்சி;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி சந்தையில் வாழைத்தார் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரந்தோறும் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில், வாழைத்தார் ஏலம் நடக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று சிறப்பு வாழைத்தார் ஏலம் நடந்தது.
வெளி மாவட்டங்கள், உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்காக, அதிகளவில் வாழைத்தார் கொண்டு வரப்பட்டது. நேற்று நடந்த ஏலத்தில் வியாபாரிகளும் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வியாபாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி மார்க்கெட்டில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காய்கறி விற்பனை சூடுபிடித்துள்ளது. இங்கிருந்து, கேரள மாநிலத்துக்கும் அதிகளவில் காய்கறி அனுப்பப்படுகிறது.
நேற்று விற்பனைக்காக, 2,000 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. அவை எடையளவு செய்து விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ பூவம்பழம் - 35 ரூபாய்; கற்பூர வள்ளி - 30 ரூபாய், செவ்வாழை - 50, மோரிஸ் - 30, நேந்திரன் - 37, கதளி - 42 ரூபாய், என, விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
பண்டிகையை முன்னிட்டு, வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த வாரத்துடன்ஒப்பிடும் போது, வாழைத்தார் விலை கிலோவுக்கு, ஏழு ரூபாய் வீதம் உயர்ந்துள்ளது.
இவ்வாறு, வியாபாரிகள் தெரிவித்தனர்.