சென்னை:''தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை, 82 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரி வசூலிக்கப்பட்டு, நாட்டில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது,'' என, தமிழகம், புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில், அவர் அளித்த பேட்டி:
தமிழகம், புதுச்சேரியில் முதல் முறையாக, 2021 - 22ல் வருமான வரியை உள்ளடக்கிய மொத்த நேரடி வரி வசூல், 1.01 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலானது. இது, 91 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை விட அதிகம்.
நடப்பு நிதியாண்டில் புதுச்சேரியில், 1,200 கோடி ரூபாய் உட்பட, 1.08 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை, 82 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.
அதில், டி.டி.எஸ்., எனப்படும் வருமானம் கொடுக்கும் போதே வரி பிடித்தம் செய்த வரி, 47 ஆயிரத்து, 313 கோடி ரூபாய். இந்தாண்டு முடிய மூன்று மாதங்கள் இருப்பதால், இலக்கை விட அதிக வரி வசூலாகும்.
நாட்டில் அதிக நேரடி வசூலில், மஹாராஷ்டிரா மும்பை, டில்லி, கர்நாடகாவின் பெங்களூருக்கு அடுத்து, தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் வரி வசூல் வளர்ச்சி, 30 சதவீதமாக உள்ளது.
டி.டி.எஸ்., வரியை பிடித்தம் செய்பவர்கள், அடுத்த மாதம், 7ம் தேதிக்குள் மத்திய அரசின் கணக்கில் 'டிபாசிட்' செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரி பிடித்தம் செய்யாவிட்டால், வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
வரி வசூலிக்க தவறிய நபர்கள் மீது, வருமான வரி சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து, மூன்று மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்க நேரிடும்.
நடப்பு நிதியாண்டில் தொடரப்பட்ட வழக்குகளில், ஏழு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, மூன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும், 9.70 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.