மேல்மருவத்துார்:'மனிதன் உழைத்து வாழ வேண்டும். இயற்கையை போற்றி வணங்கி பாதுகாக்க வேண்டும்' என, பங்காரு அடிகளார் தெரிவித்தார்.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட, பங்காரு அடிகளார் பொங்கல் வாழ்த்து வருமாறு:
பொங்கல் பண்டிகையை தமிழர்களுக்கு மட்டுமல்ல; அக்கம் பக்கத்தினருக்கும் துாரத்து உறவினர்களுக்கும் கூட வாழ்த்து தெரிவித்து கொண்டாட வேண்டும்.
விழாவால் மட்டும் தான் அமைதி கிடைக்கும், வாழ்த்து கிடைக்கும், உறவு கிடைக்கும், பந்தபாசம் கிடைக்கும்.
பண்டிகைகள் முக்கியம் என்றாலும், தர்மம் தான் மிக முக்கியம். அதர்மத்தை அடக்குவது தர்மம் மட்டும்தான்.
பண்டிகை வரும்போது, கடன் பட்டாவது புத்தாடை வாங்கி, வீட்டை சுத்தம் செய்து, வெள்ளை அடித்து, வீட்டு வாயிலில் தோரணம் கட்டி, வாழைமரம் நட்டு கொண்டாடுவது உண்டு.
பொங்கல் வைக்கும் போது, அடுப்பில் பெரிய பானை வைத்து, அதில் சிறிதளவே பாலை ஊற்றி காய்ச்சினாலும், அது பொங்கும்போது, நமக்கு இயற்கையாக உற்சாகம் பொங்குகிறது. அதுவும் ஒரு சக்தி தானே!
பொங்கலன்று இயற்கையில் விளையும் பொருட்களை வைத்து, இயற்கை வழிபாடாக சூரியனை வழிபடுகிறோம்.
மாட்டுப் பொங்கலன்று, பசுவை வழிபடுகிறோம். பசு தாய் போன்றது. அதை இரண்டாவது தாய் என்பர். மாட்டுப்பால், உடலுக்கு வலிமை சேர்ப்பது. அந்த பால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களை பெருகச் செய்கிறது.
தொடர்ந்து, காணும் பொங்கலன்று, ஒருவரை ஒருவர் சந்தித்து கூடி மகிழ்ந்து கொண்டாடுகிறோம்.
உழைப்பவனுக்கு தான் அமைதி. மனிதன் உழைத்து வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் நோய்கள் வராது.
மனித உடம்பில் சிறியவர் முதல் பெரியவர் வரை உப்பும் இருக்கும்; சர்க்கரை இருக்கும். உழைக்க, உழைக்க மனித உடம்பில் வியர்வை வெளியேறி, உடலில் உள்ள உப்பும் கரைகிறது; சர்க்கரையும் கரைகிறது. அதனால், வியாதிகள் உண்டாவது இல்லை.
சென்ற ஆண்டு, 'நல்ல மழை இருக்கும்; ஆனால் அதிக சேதாரம் இருக்காது' என்று சொன்னோம். அதை போன்றே உயிர்ச்சேதம் இல்லை; விவசாய சேதம் மட்டும் தான் இருந்தது. வரும் காலத்தில் பண வளம், தொழில் வளம், மனவளம் நன்றாக இருக்கும்.
விஞ்ஞானத்தால் அழிவுதான் உண்டாகும்.
இறைவன் இவ்வுலகில் அனைத்தையும் அமைத்துக் கொடுத்திருக்க, எல்லாம் நமக்கு இயற்கையாகவே கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி உழைத்து வாழ வேண்டும். இயற்கையை போற்றி வணங்கி பாதுகாக்க வேண்டும். தாய் - தந்தையரை வணங்கி, அவர்களை போற்ற வேண்டும். பொங்கல் வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.