சென்னை:''அயல்நாடுகளுக்கு செல்வோர் குறித்த தரவு தளம் ஏற்படுத்தப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்த, 'அயலகத் தமிழர் தினம் - 2023' விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
எந்த நாட்டுக்கு சென்றாலும், சொந்த நாட்டையும், தாய் மொழியையும், தமிழர்கள் தங்கள் நெஞ்சக் கூட்டில் அடைகாத்து வைத்திருப்பது வழக்கம்.
அயலகத் தமிழர்களின் ஆற்றலும், ஆராய்ச்சித் திறனும், உழைப்பின் மேன்மையும், உயர்ந்த பொறுப்புகளும், இன்று தனிப்பெரும் வரலாறாக உருவாகி உள்ளன.
அயலகத்தில் குடியேறி வரும் தமிழர்கள், அங்கே பணிபுரியும் இடத்தில், சிரமத்திற்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாகும் சில நிகழ்வுகள் நடக்கிறது.
எனவே, அயலகத் தமிழர்களின் நலனுக்கென, தனியே ஓர் அமைச்சகத்தை உருவாக்கி உள்ளோம்.
தமிழகத்தில் இருந்து பல்வேறு காலக்கட்டங்களில் புலம் பெயர்ந்து, அயல்நாடுகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் வாழ்ந்து வரும் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பிள்ளைகள், தமிழக மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வகையில், ஆண்டுக்கு, 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழக பண்பாட்டு சுற்றுலா அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும்.
அயல்நாடுகளில், வெளி மாநிலங்களில் பணிக்கு சென்று, அங்கு எதிர்பாராதவிதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்துக்கு, மாத ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். அயல்நாடுகளுக்கு செல்வோர் குறித்த தரவு தளம் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அயலக தன்னார்வ தமிழ் ஆசிரியர்களுக்கான டிப்ளமா பயிற்சி திட்டம், தமிழ் இணைய கல்விக் கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், இணைய வழியில் வழங்கப்பட உள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று, அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் இணைய கல்விக்கழக இயக்குனர் ஜெயசீலன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் சவுந்தரராஜன் ஆகியோர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.