சென்னை:'அம்மா உணவகங்களை மூட, தி.மு.க., அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த ஒன்றரை ஆண்டு களாக, ஏழை மக்களுக்கான, அம்மா உணவகங்கள் திட்டத்தை நீர்த்து போகச் செய்யும் நடவடிக்கைகளை, தி.மு.க., அரசு எடுத்து வருகிறது.
ஜெயலலிதாவால் படிப்படியாக விரிவாக்கப்பட்ட, அம்மா உணவகம் திட்டத்தை, படிப்படியாக குறைத்து; அங்கு பணிபுரியும் ஊழியர்களை, வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையையும், தி.மு.க., அரசு எடுத்து வருகிறது.
தற்போது, சேலம் கொண்டலாம்பட்டிக்கு உட்பட்ட, மணியனுார் அம்மா உணவகத்தில், ஆறு மகளிரை பணியில் இருந்து நீக்கிவிட்டு, தி.மு.க.,வினருக்கு வேண்டியவர்களை பணி அமர்த்தும் முயற்சி நடப்பதாக செய்திகள் வருகின்றன.
பணியில் உள்ளோர், தங்கள் பணத்தை போட்டு, அம்மா உணவகம் நடத்தி வருவதாகவும், கவுன்சிலருக்கும், தனக்கும் மாதம், 5,000 ரூபாய் தர வேண்டும் என, சேலம் மாநகர தி.மு.க., மண்டலத் தலைவர் கோருவதாகவும், செய்திகள் வருகின்றன.
மேலும் சில அம்மா உணவகங்களை மூட, மாநகராட்சி முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
கட்சியினர் தலையிடுவதை தடுத்து நிறுத்தி, தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை, முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.