சென்னை:வழக்கறிஞர்கள் சங்க தேர்தலின்போது நடந்த பிரச்னை தொடர்பான கேமரா பதிவுகளை ஆராய்ந்து, உத்தரவு பிறப்பிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல், இம்மாதம் 9ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தேர்தல் தினத்தில் ஓட்டுப் பதிவு துவங்கிய சிறிது நேரத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல் நிறுத்தப்பட்டு, தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் விவகாரம் தொடர்பாக, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வழக்கறிஞர் சத்தியபால் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.
தேர்தல் நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தேர்தலை நேர்மையாக நடத்த அறிமுகம் செய்யப்பட்ட புதிய நடைமுறையில் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, வெளியில் இருந்து சிலர் புகுந்தனர். அதனால், தேர்தலை ரத்து செய்ய நேர்ந்தது' என்றார்.
இதையடுத்து, 'வழக்கறிஞர்கள் சங்கத்தின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும்.
தேர்தல் அன்று நடந்த சம்பவம் தொடர்பாக, அறிக்கை மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து, உத்தரவு பிறப்பிக்கப்படும். விரைவில் தேர்தல் நடத்த, புதிய தேதி முடிவு செய்யப்படும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணையை, பொங்கல் விடுமுறைக்கு பின் தள்ளி வைத்தனர்.