பொள்ளாச்சி:'தினமலர்' நாளிதழின், பட்டம் இதழ் சார்பில் நடந்த, வினாடி - வினா போட்டியில், கிணத்துக்கடவு விவேக் வித்யாலயா மற்றும் விவேக் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் திறமையாக பதில் அளித்து அசத்தினர்.
பொது அறிவு மற்றும் அறிவியல் தகவல்கள், நுண்ணறிவை வளர்க்கும் விதமாக, 'தினமலர்' நாளிதழின் பட்டம் விளங்குகிறது. இது மாணவர்களின் விருப்பமான இதழாக மாறியுள்ளது. மாணவர்களிடையே, விண்வெளி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த மனப்பான்மையை ஊக்குவிக்க போட்டிகள் நடத்தப்படுகிறது.நடப்பாண்டு இந்த போட்டியை, 'தினமலர்' மாணவர் பதிப்பான பட்டம் இதழுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் இணைந்து நடத்துகிறது. மேலும், இந்த போட்டி யை, ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியும் இணைந்து நடத்துகிறது.
விவேக் வித்யாலயா
கிணத்துக்கடவு விவேக் வித்யலாயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வினாடி - வினா போட்டி நடந்தது.
தகுதிச்சுற்று தேர்வில், ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான, 450 மாணவர்கள்பங்கேற்றனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு அணிக்கு, இருவர் என, எட்டு அணியாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன.
வினாடி -- வினா போட்டி, மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டன. இறுதியில், 'ஜி' அணியை சேர்ந்த மாணவியர் நேகா, ரக் ஷிதா ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
விவேக் வித்யா மந்திர்
கிணத்துக்கடவு விவேக் வித்யா மந்திர் பள்ளியில் நடந்த, வினாடி - வினா போட்டியில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையுள்ள, 250 மாணவர்கள் பங்கேற்றனர். ஒரு அணிக்கு இருவர் வீதம், எட்டு அணியாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன.
வினாடி - வினா போட்டி, மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டன. இறுதியில், 'இ' அணியை சேர்ந்த மாணவியர் ஸ்ரீ ஹரி, தனிஷ்கா ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மாணவர்கள் கூறுகையில், 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழில் அறிவியல் சார்ந்த பல்வேறு தகவல்கள் பயனுள்ளதாக உள்ளன. வாசிப்பு திறனையும் மேம்படுத்துகிறது. மாணவர்களுக்கு பிடித்தமான, பயனுள்ள இதழ் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை,' என்றனர்.