திண்டிவனம்:திண்டிவனத்தில் அரசு கல்லுாரியில் நடந்த பொங்கல் விழாவின் போது, பஸ் மேற்கூரையில் ஏறி மாணவர்கள், 'டான்ஸ்' ஆடி 'அட்ராசிட்டி' செய்தது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக காலை, 11:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் திரண்டனர்.
கல்லுாரி நுழைவாயில் எதிரே மாணவர்கள் தாரை, தப்பட்டையுடன் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை மாணவர்கள் மறித்து நிறுத்தி, பஸ்சின் மேற்கூரையில் ஏறி டான்ஸ் ஆடினர்.
சக மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து, மொபைல் போனில் படம் பிடித்தனர். மாணவர்களின் அட்ராசிட்டியால் பஸ்சை இயக்க முடியாததால், பயணியர் அவதிக்கு உள்ளாகினர்.
ஒரு கட்டத்தில், பஸ் டிரைவரும், கண்டக்டரும் மாணவர்களை கண்டித்த பிறகு, மேற்கூரையில் டான்ஸ் ஆடிய மூன்று மாணவர்களும் மேலிருந்து கீழே குதித்து 'ஹீரோயிசம்' காண்பித்தனர்.
இச்சம்பவங்களை மொபைல் போனில் படம் பிடித்த மாணவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து, மாணவர்களின் 'அட்ராசிட்டி' சம்பவம் வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.