பொள்ளாச்சி:இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில்,நடத்தப்படும் பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் தயாராகிவருகின்றனர். இதற்கான பொருட்கள் விற்பனையும் ஜரூராக நடக்கிறது.
'தென்னை நகரம்' என அழைக்கப்படும் பொள்ளாச்சியில், முதன்மை பயிராக தென்னையும், நெல், கரும்பு, வாழை, பாக்கு, காய்கறி உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
பால் உற்பத்திக்காக கால்நடை வளர்ப்பிலும், விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இதனால், ஆண்டுதோறும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு, வீடுகளை சுத்தம் செய்தல் மற்றும் வெள்ளையடிக்கும் பணியில், கடந்த சில வாரங்களாக மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் நாள் போகியும், அடுத்த நாள் பொங்கல் பண்டிகை, அதற்கு அடுத்த நாள், மாட்டுப்பொங்கல் விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்த மூன்று நாட்கள் பண்டிகை கொண்டாட்டத்துக்காக நகரம், கிராமங்களில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூப்பொங்கலன்று மலைக்கோவில்களில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
விற்பனை ஜரூர்
சேலம், நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கரும்பு கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்தாண்டை விட இந்தாண்டு வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
விற்பனையாளர்கள் கூறுகையில், 'தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் வழங்குகிறது. இதனால், மார்க்கெட்டுக்கு கரும்பு வரத்து குறைந்தது. ஒரு கட்டு (15 கரும்பு), 500 - 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்தாண்டு விலையும், விற்பனையும் விறுவிறுப்பாக இருக்கும்,' என்றனர்.
மாடுகளுக்கு அணிகலன்
பொங்கல் விழாவில், விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு, மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு மாட்டுப்பொங்கலுக்கு தேவையான விதவிதமான அணிகலன்கள், சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதில், பலவிதமான மூக்கணாங்கயிறு, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கட்டப்படும் கயிறுகள் என, கால்நடைகளை அழகுப்படுத்தும் அணிகலன்கள் அதிகளவு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பல வண்ணமுள்ள சாட்டைகளும் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
வியாபாரிகள் கூறுகையில், 'மாட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகளவு பொருட்கள் விற்பனைக்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 10 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரை அணிகலன்கள் விற்பனைக்கு உள்ளன. இந்தாண்டு விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தோம்.
ஆனால், கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் வந்துள்ளதால், விவசாயிகள் மாட்டுப் பொங்கலை கொண்டாட தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இதனால், எதிர்பார்த்த அளவு விற்பனை இருக்குமா என தெரியவில்லை,' என்றனர்.