திருநெல்வேலி:டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் சிவில் நீதிபதிகள் தேர்வு தள்ளிப்போவது ஏன் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு ஆணையம் பதிலளித்துள்ளது.
தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் நிரப்பப்பட வேண்டிய சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. 2018ல் நடந்த தேர்வில் 222 பேரும் 2019ல் நடந்த தேர்வில் 56 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். 2020ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படவில்லை. 2022ல் உத்தேச திட்டமிடலில் 245 சிவில் நீதிபதிகள் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும். தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்தாண்டு தேர்வு நடத்தப்படவில்லை. 2023ம் ஆண்டில் தேர்வு நடத்துவது குறித்தும் கடந்த மாதம் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட உத்தேச திட்டமிடலில் அறிவிப்பு இல்லை. இந்த ஆண்டு தேர்வு நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி டி.என்.பி.எஸ்.சி.,க்கு மனு செய்திருந்தார். அதில், 'சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு அறிவிப்பு ஏன் காலதாமதமாகிறது, 2023ல் அறிவிக்கப்படுமா, 2023 உத்தேச திட்டமிடலில் ஏன் சிவில் நீதிபதிகள் தேர்வு குறித்து குறிப்பிடப்படவில்லை' என கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு ஆணையத்தின் பொது தகவல் அலுவலர் பாலசுப்பிரமணியம் அளித்துள்ள பதிலில், தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு குறித்த தமிழக அரசின் அரசாணைக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் மாவட்டம் தோறும் அனுமதிக்கப்பட்டு வரும் தனியார் சட்ட கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சட்ட பட்டதாரிகள் உருவாகின்றனர். இவர்கள் சிவில் நீதிபதி தேர்வுக்காக தொடர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கால தாமதமாவதால் வயது முதிர்வு ஏற்பட்டு அவர்கள் தேர்வில் பங்கு பெற முடியாத நிலை ஏற்படலாம்.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் நீதிபதிகள் ஓய்வு பெற்றதால் காலியான பணியிடங்கள் அதிகரித்துள்ளது. எனவே இந்த ஆண்டு தேர்வினை நடத்த அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என வழக்கறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.