பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நேற்று துவங்க இருந்த பலுான் திருவிழா, திடீரென ஒத்திவைக்கப்பட்டது. முறையான தகவல் இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டியில், தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில், பலுான் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழா நேற்று துவங்கி, 15ம் தேதி வரை நடத்தப்படுகிறது என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு, எட்டு நாடுகளில் இருந்து, 13 பலுான்கள் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ெஹலிகாப்டரில் ஊரை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மாலை நேரத்தில், மியூசிக் ேஷா, குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. பலுான் திருவிழா நடக்கும் இடத்தை கடந்த மாதம் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
திட்டமிடப்படி, சுற்றுலாத்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் தலைமையில், திருவிழா நேற்று துவங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அங்கு சென்றனர்.
பலுான் பறப்பதை காணவும், அதில் பறக்க ஆர்வத்துடன் மக்களும் வந்திருந்தனர். ஆனால், விழா ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து முறையான தகவல்கள் இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தமிழக சட்டசபை நடைபெறுவதால், விழாவில் அமைச்சர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.
ஒத்திவைப்பு ஏன்?
இதையடுத்து, விழா வரும், 14ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறுவதாக அறிவித்து, அதன் பின் முறையான தகவல் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வரும், 14ம் தேதி துவங்குகிறது என்றால், அடுத்த மூன்று நாட்கள் நடக்குமா அல்லது, 15ம் தேதியுடன் விழா முடிவடைகிறதா என்பது தெரியவில்லை. தெளிவான அறிவிப்பும் இல்லை.
வீணாகும் அரசு நிதி
சுற்றுலா துறை சார்பில் பலுான் திருவிழா நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தனியார் மற்றும் 'ஸ்பான்சர்' நிறுவனங்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்று, பலுானில் பறக்க முடியும் என, நிபந்தனை கூறப்படுகிறது.
பொதுமக்கள் நுழைவு கட்டணம் செலுத்தி உள்ளே சென்றாலும், துாரத்தில் நின்று பலுான் பறப்பதை பார்க்க முடியும், என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ெஹலிகாப்டரில் பறக்க முன்பதிவு முறை மட்டுமே உள்ளது.
பொங்கல் விடுமுறையில் மக்கள் பங்கேற்க வசதியாக, பலுான் திருழா நடப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்காக பெரும் தொகை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், மக்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், நிதி ஒதுக்கீட்டில் கோல்மால் நடந்துள்ளதாகவும் சர்ச்சை கிளம்பியுள்ளது.