மதுரை:புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்கில் ஜாமின் கோரியவர்களுக்கு, 'அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியதாக, சிவகங்கை சரத்குமார், விக்னேஸ்வரன், வினோத்கண்ணன் ஆகியோரை, நாச்சியாபுரம் போலீசார் கைது செய்தனர்.
ஜாமின் கோரி மூவரும் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இம்மனுக்கள் நீதிபதி ஏ.டி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
சரத்குமார், வினோத் கண்ணன் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்; விக்னேஸ்வரன் ஜாமினை தள்ளுபடி செய்தார்.
மேலும், சரத்குமார் ஒரு லட்சம், வினோத் கண்ணன், 1.50 லட்சம் ரூபாயை, தேவகோட்டை தாலுகா, வீரை ஊராட்சி காரிக்குடி அரசு நடுநிலைப்பள்ளிக்கு செலவிட வேண்டும். அதற்காக அதன் தலைமையாசிரியர் வங்கி கணக்கில் அந்த பணத்தை செலுத்த வேண்டும்.
அந்த பணத்தை பள்ளிக்கு தேவையான பர்னிச்சர்கள் வாங்க வேண்டும். இதற்கான விபரங்களை சம்பந்தப்பட்ட போலீசில் தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டார்.