பண மோசடி செய்தவர் கைது
கேரள மாநிலம், திருச்சூரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் பீரவீன் ராணா, 40. இவர், பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி, பலரிடம் பணம் வசூலித்தார். 100 கோடிக்கு மேல் பணம் வசூலானதும் தலைமறைவாகிவிட்டார். இவர் மீது, திருச்சூர் போலீஸ் உள்பட பல்வேறு ஸ்டேஷன்களில், 22க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. கேரள மாநில தனிப்படை போலீசார் இவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள தேவராயபுரம் கல்குவாரியில் தொழிலாளருடன் ஒரு குடிசையில் சாமியார் தோற்றத்தில் பிரவீன் ராணா தங்கி இருந்தார். குடும்பத்துடன் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் அங்கு தங்கி இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, கேரள மாநில போலீசார், கைது செய்து திருச்சூருக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.
கொலை மிரட்டல்; ஒருவர் கைது
கிணத்துக்கடவு மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மோகன்பாபு,39. இவர், கிணத்துக்கடவில் உள்ள தியேட்டரில் சினிமாவுக்கு சென்றார்.
அங்குள்ள கழிப்பிடத்துக்கு சென்ற அவரிடம், சிக்கலாம்பாளையத்தை சேர்ந்த கார்த்தி,25, டிக்கெட் வேண்டுமென்றால், 500 ரூபாய் கொடு என கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர், பணமில்லை என தெரிவித்துள்ளார்.
இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மோகன்பாபுக்கு, கார்த்தி கொலை மிரட்டல் வித்துள்ளார். இதுகுறித்து மோகன்பாபு கொடுத்த புகாரின் பேரில், கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்தியை கைது செய்தனர்.
தகராறில் ஈடுபட்டவர் கைது
நெகமம் அருகே, செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் கண்டீஸ்வரன்,40. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள்,70, என்பவருககும் முன் விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கண்டீஸ்வரன், குடிபோதையில் சென்று பேச்சியம்மாளிடம் தகராறு செய்து, தகாத வார்த்தையால் பேசி கட்டையால் தாக்கியுள்ளார்.
இதை தடுக்க வந்த பேச்சியம்மாளின் மகன் காளிமுத்துவையும் தாக்கினார். காயமடைந்த இருவரும், பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த நெகமம் போலீசார், கண்டீஸ்வரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.