வால்பாறை:வால்பாறையில், ஜி.எஸ்.டி., 'டெஸ்ட் பர்சேஸ்' முறையை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் ஜி.எஸ்.டி., 'டெஸ்ட் பர்சேஸ்' முறையை கண்டித்து போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். கடைகளில் ஜி.எஸ்.டி.,க்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வணிக வரித்துறையினர், 'டெஸ்ட் பர்சேஸ்' என்ற பெயரில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டும் வியாபாரிகளின் கடைகளுக்கு சென்று, தாங்களே பொருட்களை வாங்கிய பின், அதற்குரிய வரி செலுத்தாமல் விற்பனை செய்யப்படுகிறது என குற்றஞ்சாட்டி, வணிகர்களிடம் பெரும் தொகையை அபராதமாக வசூலிக்கின்றனர்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால், சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், 'டெஸ்ட் பர்சேஸ்' முறையை கைவிடக்கோரியும், வியாபாரிகள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கடைகளில் போஸ்டர் ஒட்டியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.