தேவகோட்டை:''மத்தியில் ஆட்சியில் பங்கேற்ற போதே சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த முடியாத தி.மு.க.,வினர் இப்போது எப்படி செயல்படுத்துவார்கள் ,''என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
தேவகோட்டையில் அவர் கூறியதாவது:
சேது சமுத்திர திட்டத்தை கருணாநிதி காலத்தில் தி.மு.க., மத்தியில் ஆட்சியில் பங்கேற்றபோதே கொண்டு வர முடியவில்லை. இப்போது அவர்களிடம் அதிகாரம் உள்ளது. ஆனால் செயல்படுத்த விடுவார்களா. சுப்பிரமணியன் சுவாமி என்ன சொல்கிறார் என பார்ப்போம். செவிலியர் போராட்டத்தை ஆதரிக்கிறோம். நிரந்தரமாக்கினால் ஓய்வூதியம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் மறுக்கிறார்கள்.
இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு சரியில்லை தான். ஏற்கனவே 18 கொலை என்றவுடன் 10 என்று ஒப்புக்கொண்டனர். தேவகோட்டை அருகே நடந்த இரட்டைக்கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக பிடிக்க வேண்டும். சினிமா வெளியீட்டின் போது பாலாபிஷேகம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதில் மாநிலங்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். கேரளா, ஆந்திராவில் இப்படி கொண்டாடுவதில்லை. இப்பிரச்னையில் ஒருவர் இறந்துள்ளார். எல்லை மீறும் செயல்களை நடிகர்கள் கண்டிக்க வேண்டும். 'நீட்' தேர்வு தொடர்பாக தி.மு.க., - அ.தி.மு.க. மாறி மாறி சண்டை போட்டு கொள்ள வேண்டியது தான். ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு விபூதி, சந்தனம் பூசுவது, மாலை அணிவதில் தடை விதிக்க முடியாது, என்றார்.