பல்லடம்:பல்லடம் அருகே, பட்டா நிலத்தில் பல நுாறு யூனிட் மண் கடத்தப்பட்ட நிலையில், ஆய்வுக்கு பின் அப்படி எதுவும் இல்லை என அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
பல்லடம் அருகே வதம்பச்சேரி, நல்லுார்பாளையம் கிராமத்தில், பட்டா நிலம் ஒன்றில் பல நுாறு யூனிட் மண் கடத்தப்பட்டதாக புகார் எழந்தது. தென்னங்கன்று நடப்பட்டு, விவசாய நிலம் என்ற போர்வையில், மண், மற்றும் ஓடை கற்கள் கடத்தல் நடந்துள்ளது. இதனால், ஏறத்தாழ, 20 அடிக்கு மேல் பள்ளங்கள் உருவாகி உள்ளன.
அப்பகுதியினர் கூறுகையில், 'ஆண்டு முழுவதும், அதிகாரிகளின் ஆசியுடன் இப்பகுதியில் மண் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. இது குறித்து புகார் எழுந்தும், மண் கடத்தல் ஆசாமிகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மண், மற்றும் ஓடை கற்கள் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு வருகின்றன. மண் சுரண்டப்பட்டதால், இப்பகுதியில் மிகப்பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. அதிகாரிகள் ஆதரவுடன், கனிம வள கடத்தல் தொடர்கதையாக நடந்து வருகிறது,' என்றனர்.
சிறிது மண் எடுத்தனர்
இது குறித்து, வதம்பச்சேரி வி.ஏ.ஓ., மேகலா கூறுகையில், ''இது தொடர்பாக புகார் வந்தது. ஆய்வு மேற்கொண்டதில், எந்த வாகனங்களும் அங்கு இல்லை. பட்டதாரரிடம் விசாரித்ததற்கு குழியும், மேடுமாக இருந்ததை சமன் செய்து வருவதாக கூறினார். சிறிது மண் எடுத்து மேலே போட்டு சமன் செய்துள்ளனர்,'' என்றார்.
''மண் எடுக்கப்பட்டுள்ளதா'' என்று கேட்டதற்கு, ''இது குறித்து எனது உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவேன்'' என்றார். சூலுார் தாசில்தார் சுகுணாவிடம் கேட்டதற்கு, ''கிராம நிர்வாக அலுவலர் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், விசாரிக்கிறேன்,'' என்றார்.