ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல்படும் உண்டு உறைவிட பள்ளியில் சிறுவனை அடித்து துன்புறுத்தியதாக தாளாளர் சிலிஸ்டரை 49, போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் செண்பகத்தோப்பு ரோடு மருது நகரில் 'லைட்ஸ் ஆப் லைப்' உண்டு உறைவிட பள்ளி செயல்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆதரவற்ற சிறுவர்கள் 22 பேர் தங்கி உள்ளனர். இதன் தாளாளராக சிலிஸ்டர் உள்ளார்.
இந்நிலையில் சைல்ட் ஹெல்ப் லைன் பிரிவிற்கு ஜன. 9ல் அங்கு தங்கி உள்ள கடலுார் மாவட்டம் மேல் குமாரமங்கலத்தை சேர்ந்த 13 வயது சிறுவனை தாளாளர் அடித்து துன்புறுத்தியதாக புகாரும், அது குறித்து வீடியோ பதிவும் வந்தது.
நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்துார் சைல்ட் ஹெல்ப்லைன் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், ஆசிரியர் பயிற்றுநர்கள் மாரியப்பன், தர்மர், ராஜபாளையம் குழந்தைகள் அலுவலர் வனிதா குழுவினர் பள்ளியில் விசாரித்தனர்.
இதில் தாளாளரை எதிர்த்து பேசியதால் அவர் கம்பால் சிறுவனின் தொடையில் அடித்து காயப்படுத்தியது தெரிந்தது. இதையடுத்து போலீசார் சிலிஸ்டரை கைது செய்தனர்.