ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேறுவதால் நீர்மட்டம் 50.43 அடியாக குறைந்தது.
அணையின் உயரம் 71 அடி. அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறு மூலம் நீர்வரும். தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் கடந்த அக்., 22 ல் முழு அளவான 71 அடியாக உயர்ந்தது.
திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாகவும், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு ஆற்றின் வழியாகவும் நீர் சில மாதங்களாக வெளியேறியது.
இதனால் டிச.,29ல் 64.27 அடியாக இருந்த நீர்மட்டம் ஜன., 4-ல் 57.91 அடியாகவும், நேற்று மாலை 4:00 மணிக்கு 50.43 அடியாகவும் குறைந்தது.
கடந்தாண்டு இதே நாளில் வைகை அணையின் நீர்மட்டம் 70.01அடியாக இருந்தது.
நேற்று அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1605 கன அடியாகவும், அணையிலிருந்து ஆற்றின் வழியாக வினாடிக்கு 900 கன அடி, மதுரை, தேனி, ஆண்டிபட்டி,- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கனஅடியும் வெளியேறுகிறது.