திருப்பூர்:'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், வினாடி - வினா போட்டி, மங்கலம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் நடைபெற்றது.
'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் சார்பில், வினாடி - வினா போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு போட்டியை 'தினமலர் - பட்டம்' இதழுடன், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் இணைந்து நடத்துகிறது. அவ்வகையில், திருப்பூர், மங்கலம், வேட்டுவபாளையத்தில் உள்ள அமிர்த வித்யாலயம் சீனியர் செகண்டரி பள்ளியில் (சி.பி.எஸ்.இ.,) நடந்த தகுதி சுற்று தேர்வில், 692 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், அதிக மதிப்பெண்கள் பெற்ற, 16 பேர், ஏ, பி, சி, டி, இ, எப், ஜி, எச் என, எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். இவர்களுக்கு, மூன்று சுற்றுகள் வீதம், 'பட்டம்' இதழில் இடம்பெறும் பொது அறிவு தொடர்பான கேள்விகள் அனைத்து துறைகளிலும் கேட்கப்பட்டன.
இறுதியில் 'எச்' அணியை சேர்ந்த நீலா மெகா, இந்துமதி ஆகியோர், 20 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றனர். மேலும், இவர்கள், இருவரும் மாநில அளவிலான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் வித்யாசாகர், பள்ளி ஒருங்கிணைப்பாளர் சிகப்பி ஆகியோர் வெற்றி பெற்றவர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கினர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் மீனாகுமாரி, காளீஸ்வரி ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்து நடத்தினர். இந்த போட்டியினை, ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியும் இணைந்து நடத்துகிறது.