திருப்பூர்:பொங்கல் விடுமுறையில் சாலை பாதுகாப்பு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சாலை விபத்தை தவிர்க்கவும், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால், சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
ஜன., முதல் அல்லது கடைசி வாரம் தொடர்ந்து ஏழு நாட்கள் அனைத்து மாவட்டங்களில் விழிப்புணர்வு ஒரே நேரத்தில் நடத்தப்படும்; இதனால், வாகன ஓட்டிகள் விழிப்புணர்வு குறித்து அனைவருக்கும் தெரிய வரும் என்பது போக்குவரத்துறையின் நோக்கம்.
நடப்பாண்டுக்கான அறிவிப்பு நேற்றுமுன்தினம் இரவு வெளியானது. அதில், வரும் 11 முதல், 17 வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் இரு நாள் கடந்த நிலையில், நாளை (13ம் தேதி) தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப்பாதையில் பயணிக்கும் வாகனங்களை தடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வரும், 14ம் தேதி பொங்கல் நாளில், அதிக பாரம் ஏற்றுவதை தடுக்க சிறப்பு சோதனை செய்வது, பொங்கல் தினத்தன்று (15ம் தேதி) தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பாதசாரிகளுக்கு நடை மேம்பாலம், சுரங்க நடைபாதை கடப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, 16ம் தேதி சாலை பாதுகாப்பு உபகரணம் நிறுவுதல், 17ம் தேதி கண் பரிசோதனை முகாம் நடத்துதல் என விழிப்புணர்வு வார அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவா வேகம்?
ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த 11ம் தேதி முதல் விழிப்புணர்வு துவங்க வேண்டும்; இதை 11ம் தேதி மாலை தான் இ மெயிலில் அனுப்பி வைக்கின்றனர். ஒரு வாரம் முன்கூட்டியே தெரிவித்தால், அதற்கேற்ப தக்க ஏற்பாடுகளை செய்ய முடியும்.
கடைசி நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டால், இன்றும் (நேற்றும்), நாளையும் (இன்றும்) இரு நாள் மட்டுமே அலுவலகம். 14 துவங்கி, 17 வரை பொங்கல் விடுமுறை. நாங்கள் என்ன செய்ய முடியும்? கூடுமானவரை விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிப்போம்,' என்றார்.