-நமது நிருபர்-
கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப, ஆளும்கட்சியினர் வசூல்வேட்டை நடத்தி வந்த நிலையில், எந்தப் பரிந்துரையுமின்றி, 47 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி, கோவை கலெக்டர் சமீரன் அதிர்ச்சி அளித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக, மூன்று மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு, கடந்தாண்டு, டிச., 4ல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வானவர்களுக்கு, சம்பந்தப்பட்ட தாலுகா ஆபீஸ்களில் நேர்காணல் மற்றும் திறன் தேர்வு, கடந்த, 5ம் தேதியில் இருந்து, 10ம் தேதி வரை நடத்தப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் 229, அன்னுாரில் 244, கோவை வடக்கில் 506, சூலுாரில் 467, பேரூரில் 284, மதுக்கரையில் 51, கிணத்துக்கடவில் 109, பொள்ளாச்சியில் 496, ஆனைமலையில் 262 என்ற எண்ணிக்கையில், ஏராளமானவர்கள் இத்தேர்வுகளில் பங்கேற்றனர். இப்பணியிடங்களுக்கு, ஆளும்கட்சியினர் தரப்பில் வசூல் வேட்டை நடந்தது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, இந்த பணியிடங்களுக்கு மூன்று லட்ச ரூபாய் வாங்கப்பட்ட நிலையில், இப்போது கிராம உதவியாளர் பணியிடத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் கேட்டு பேரங்கள் நடந்தன. ஆளும்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், பகுதிக்கழகச் செயலாளர்கள் பெயர்களில் உறுதியளித்து, பலரிடமும் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக புகார் கிளம்பியது.
யாரும் எதிர்பாராத விதமாக, நேற்று முன் தினம் இரவு, 47 பேரை தேர்வு செய்து, கிராம உதவியாளர்கள் பணி நியமன ஆணையை வழங்க, கோவை கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், இரவோடு இரவாக அந்தந்த தாலுகா ஆபீஸ்களில் தேர்வானவர்கள் பட்டியல் ஒட்டப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தபால் மூலமாக, பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆளும்கட்சியினரின் பரிந்துரை, லஞ்சம் எதுவுமின்றி, நடத்தப்பட்ட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், நேர்மையான முறையில் இப்பணி நியமனங்களை கலெக்டர் வழங்கியுள்ளார்.
இது, கோவையில் உள்ள ஆளும்கட்சி நிர்வாகிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வாங்கிய பணத்தை திருப்பித்தர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கோவை கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ., ஆகிய இருவரும், ஆளும்கட்சியினரின் புகாரின் பேரில், பணியிட மாறுதல் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தது. இப்படியொரு சூழலில், இப்பணி நியமனங்களை சத்தமின்றி நிறைவு செய்து, ஆளும்கட்சியினருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.