கோவை:'தினமலர்' மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் நடந்த மெகா வினாடி-வினா போட்டியில், மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று, பார்வையாளர்களை வியக்க வைத்தனர்.
'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி-வினா போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு, 'தினமலர்' பட்டம் இதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் சார்பில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், 130 பள்ளிகளில் நடத்தப்படுகிறது.
எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி
இப்போட்டி, சொக்கம்புதுாரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 256 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் காலிறுதி சுற்றுக்கான போட்டி மூன்று சுற்றுகளாக நடைபெற்றது.
'ஜி' அணியைச் சேர்ந்த ஹரிவர்ஷன், ஹரிசங்கர் ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் ஜீவா செந்தில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தார். நுாலகர் சிவராமன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
எஸ்.எஸ்.வி.எம்., (சி.பி.எஸ்.சி.,) பள்ளி
சிறுமுகை, ஆலங்கொம்பில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்., (சி.பி.எஸ்.சி.,) பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றில், ஏராளமான மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வு செய்யப்பட்ட, 8 அணிகளுக்கு காலிறுதி போட்டி நடந்தது. 'ஹெச்' அணியைச் சேர்ந்த, மிதுன் செந்தில்குமார், ஆசிஷ் பாபு ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் சுகுணாதேவி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். ஆசிரியர்கள் ஜெஸ்ஸி நிர்மல், அபிராமி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
எஸ்.எஸ்.வி.எம்., மெட்ரிக் பள்ளி
சிறுமுகை, ஆலாங்கொம்பில் அமைந்துள்ள எஸ்.எஸ்.வி.எம்., மெட்ரிக் பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றில், ஏராளமான மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வு செய்யப்பட்ட 8 அணிகளுக்கு நடந்த காலிறுதி போட்டியில், 'இ' அணியைச் சேர்ந்த, பாசவி, ஹஸ்னா மர்ஜூஹா ஆகியோர் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் ஹாஜா செரீப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். ஆசிரியர் சசிகலா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
'தினமலர்' பட்டம் இதழுடன், சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, இப்போட்டியை இணைந்து வழங்குகிறது.