சென்னை:''போதை பொருட்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் தான் செய்திகள் வருகின்றன. கண்டும் காணாமலும் இருந்திருந்தால் எந்த செய்தியும் வராது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்கட்சி தலைவர் பழனிசாமி: போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பள்ளி கல்லுாரிகளுக்கு அருகில் கஞ்சா விற்றது தொடர்பாக, 2,136 வழக்குகள் பதிவாகி உள்ளது; 148 பேர் கைது செய்யப்பட்டதாக, போலீஸ் மானியக் கோரிக்கை புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருள் விற்பனையை தடுக்க முடியாத சூழல் நிலவுகிறது.
முதல்வர் ஸ்டாலின்: போதை பொருள் தடுப்பு நடவடிக்கையை பொறுத்தவரை, புதிய வரலாறு படைக்கப்பட்டு உள்ளது. சிறப்பு ஆப்பரேஷன் வாயிலாக குட்கா, கஞ்சா அதிகம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் சிக்கியவர்களுக்கு ஜாமின் வழங்க, நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
வங்கி கணக்குகள், சொத்துக்கள் முடக்கம் போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கலெக்டர் எஸ்.பி.,க்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர் போலீஸ் டி.ஜி.பி., கமிஷனர் மீது குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. போதை பொருட்களை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிப்பதுதான் அரசின் இலக்கு.
பழனிசாமி: பல்வேறு சோதனை சாவடிகளை கடந்து 160 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் ராமநாதபுரத்திற்கு சென்றதை மத்திய புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்காதது எவ்வளவு என்று தெரியவில்லை.
முதல்வர்: போதைப் பொருள் விற்பனை குறித்து நீங்கள் கவலைப்படாமல் இருந்தீர்கள்; அதனால், செய்திகள் வரவில்லை; நாங்கள் கண்டுபிடிக்கிறோம்; செய்திகள் வருகிறது.
பழனிசாமி: நாங்கள் இருக்கும் நிலையை சொல்கிறோம். எதையோ சொல்லி சமாதானப்படுத்த கூடாது.
சரியான நடவடிக்கைகளை எடுத்து, போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்.
முதல்வர்: கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் தான் செய்திகள் வருகிறது. கண்டும், காணாமலும் இருந்திருந்தால் எந்த செய்தியும் வராது.
இவ்வாறு விவாதம் நடந்தது.