சென்னை:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேள்விக்கு பதில் சொல்வதில் குழப்பிய அமைச்சரை முதல்வர் ஸ்டாலின் கண்டித்தார்.
சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார். 'பொங்கல் பரிசு தொகுப்பில் பல இடங்களில் வேட்டி, சேலை வழங்கப்படவில்லை.
அவற்றை அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முழுமையாக வழங்க வேண்டும்' என, அவர் வலியுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்ட கைத்தறி அமைச்சர் காந்தி அ.தி.மு.க., ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் வேட்டி, சேலை வழங்க எடுத்துக் கொண்ட காலத்தை பட்டியலிட்டு கொண்டே இருந்தார். குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின் 'எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, குற்றச்சாட்டாக அல்லாமல், அனைவருக்கும் வேட்டி, சேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதற்குரிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும். எப்போது வேட்டி, சேலை வழங்கி முடிப்பீர்கள் என்று சொல்லுங்கள்' என கண்டித்தார்.
இதையடுத்து, அமைச்சர் காந்தி, ''புதிய டிசைனில் வேட்டி, சேலைகள் தயாராகி வருகிறது. இதை ரேஷன் கடைகளுக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பிப்., 15க்குள் வேட்டி, சேலைகள் வழங்கி முடிக்கப்படும்,'' என்றார்.