கோவை:உலக நன்மைக்காக, பேரூர் மஹா பெரியவா கோவிலில் நாளை ஸ்ரீ அகண்ட ராமநாம பஜனோத்ஸவம் துவங்கி, நாளை மறுதினம் நிறைவடைகிறது.
காஞ்சி மஹா பெரியவருக்கென, கோவையை அடுத்த பேரூரில் கோவில் நிர்மானிக்கப்பட்டு, அனுதினமும் நித்யபடி பூஜை, விழா மற்றும் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. உலக நன்மைக்காக இக்கோவிலில், 24 மணி நேரம் தொடர்ந்து ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம், பஜனோத்ஸவம் நடக்கிறது. ராஜகணபதி பஜனை சபாவை சேர்ந்த இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் பங்கேற்கின்றனர். நாளை காலை, 7:00 மணிக்கு துவங்கி, அடுத்த நாள் காலை, 7:00 மணிக்கு நிறைவடைகிறது.
பேரூர் மஹா பெரியவா கோவில் ஸ்ரவுதிகள் ராமன் கூறியதாவது:
ஸ்ரீ அகண்ட ராம நாம பஜனோத்ஸவம், 63வது ஆண்டாக நடக்கிறது. பஜனோத்ஸவத்துக்கு முன்னதாக, அதிகாலை ஸ்ரீகணபதி ஹோமம், உபநிஷ பாராயணம் துவக்கம், ஸ்வாமி ஆவாஹன பூஜைகளை தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு அகண்டராம நாம பஜனை துவங்குகிறது. அடுத்த நாள் ஜன., 15 அன்று காலை ராமநாம பஜனை நிறைவடைகிறது.
நகர சங்கீர்த்தனம் கோவிலில் இருந்து புறப்பட்டு, வெங்கடேசபுரம், வடக்கு ரத வீதி, அக்ரஹாரம், சிறுவாணி சாலை வழியாக மீண்டும் கோவிலை வந்தடைகிறது.
தொடர்ந்து கிராமபிரதக் ஷனம், ஹாரத்தி, பிரசாத வினியோகம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், ஹனுமன்சாலீசா, ஆஞ்சநேய உற்சவம், மங்கள ஹாரத்தி, பிரசாத வினியோகம் ஆகியவை நடக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.